சனாதன விவகாரம்: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபுவை பதவிநீக்கம் செய்ய கவர்னரிடம் பா.ஜ.க. மனு

சனாதனத்தை பின்பற்றும் மக்களின் உணர்வுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புண்படுத்தியுள்ளார் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

Update: 2023-09-07 07:20 GMT

சென்னை,

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதினர்.

மேலும் சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக மந்திரி பிரியங் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக்கோரி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பா.ஜ.க. நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், தமிழ்நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார் எனவும், சனாதனத்தை பின்பற்றும் அனைத்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது வரை அவர் மீது எந்த இடத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல் சனாதன எதிர்ப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, அதே மேடையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அமர்ந்திருந்தது அமைச்சராக பதவியேற்கும் போது எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பி.க்கு கவர்னர் ஆர்.என்.ரவி வலியுறுத்த வேண்டும் என பா.ஜ.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்