பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை கைது..!

அரியலூரில் பெற்ற மகளை 7 மாதம் கர்ப்பமாக்கிய கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-28 06:48 GMT

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 37) லாரி ஓட்டுநர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் மிரட்டி பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.

மகளின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்டு அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என கருதிய அவர், மகளுக்கு ராயம்புரம் கிராமத்தில் உள்ள ஒரு மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார். அதனை மாணவி வாங்கி சாப்பிட்டார். பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு ஆண் சிசு இறந்து பிறந்தது. பின்னர் அந்த சிசுவை ஒரு சாக்குப் பையில் சுற்றி வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவிக்கு உதிரப்போக்கு நிற்காததால் வேறு வழி இல்லாமல் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த மாணவிக்கு கருக்கலைப்பு நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக பணியாளர் செல்வி அகஸ்தியர் செந்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் செந்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் வீட்டின் பின்புறம் புதைத்த 7 மாத சிசுவின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான அவரது கொடூர தந்தை, கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்த தாயார், மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மெடிக்கல் உரிமையாளர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெற்ற மகளை தந்தை பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கி கருக்கலைப்பு செய்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்