பல்லாவரத்தில் இரவு ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவின் மூக்கு உடைப்பு - 3 வாலிபர்கள் கைது

பல்லாவரத்தில் இரவு ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவின் மீது தாக்குதல் நடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2023-07-22 10:22 IST

பல்லாவரம், 

சென்னையை அடுத்த பரங்கிமலை கலைஞர் நகரைச் சேர்ந்தவர் வீரசெல்வம் (வயது 34). இவர், பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர், கண்டோன்மென்ட் பல்லாவரம், பொன்னியம்மன் கோவில் தெருவில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் போலீஸ் ஏட்டு வீரசெல்வத்தை இடிப்பது போல் வேகமாக வந்தனர். இதனால் நிலைதடுமாறிய வீரசெல்வம், கீழே விழாமல் இருக்க வாலிபர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் கைப்பிடியை கையால் பிடித்து நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து, போலீஸ் ஏட்டு வீரசெல்வம் முகத்தில் சரமாரியாக குத்தினர். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், 3 வாலிபர்களையும் மடக்கிப்பிடித்து, பல்லாவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள், பம்மல் பகுதியை சேர்ந்த ரோகித் (23), விக்னேஷ் (25), முகமது ஆசிப் (23) என்பதும், கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது. 3 பேரையும் போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூக்கு உடைந்ததால் காயம் அடைந்த ஏட்டு வீரசெல்வத்தை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்