உசிலம்பட்டி அருகே அரசு பஸ்சில் கழன்று ஓடிய டயர்- பயணிகள் உயிர் தப்பினர்

உசிலம்பட்டி அருகே ஓடும் பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியது. டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2023-10-01 20:42 GMT

உசிலம்பட்டி


முன்பக்க டயர் கழன்று ஓடியது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து பேரையூர் நோக்கி நேற்று மதியம் அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை டிரைவர் மகேஷ் ஓட்டினார். பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர்.

அந்த டவுன் பஸ் நல்லுத்தேவன்பட்டி கண்மாய் அருகே சென்றபோது திடீரென்று பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியது. திடீரென்று பஸ் சத்தத்துடன் ஒரு பக்கம் கீழே இறங்கியதால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினா். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தினார். இதன் காரணமாக பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் தப்பினா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி போலீசார், உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பஸ்சில் இருந்து கழன்று ஓடிய டயர் சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தில் கிடந்தது. இதையடுத்து பஸ்சை சரி செய்து பணிமனைக்கு ஓட்டி சென்றனர்.

டிரைவருக்கு பாராட்டு

இதற்கிடையே அந்த பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் மாற்றுப்பஸ்சில் பேரையூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பஸ்சின் முன்பக்க டயர் கழன்ற உடனே பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய டிைரவரை பலரும் பாராட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்