தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - அண்ணாமலை

2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜனதா ஆட்சி அமைத்ததும் அரசு வேலை இல்லாத குடும்பத்திற்கு அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2024-02-04 23:42 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நேற்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் பிரசார வாகனத்தில் இருந்தபடி பேசியதாவது:- 2026-ம் ஆண்டு பா.ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்போது கொய்யாப்பழத்திற்கும் பிரதமர் மோடி புவிசார் குறியீடு அறிவிப்பார். தமிழகத்தில் 9 ஆண்டுகள் காமராஜர் ஆட்சி செய்தார். அவர் ஆட்சி செய்த காலத்தில் பல மாவட்டங்களில் அணைகள் கட்டப்பட்டன. அதன் பிறகு வந்த முதல்-அமைச்சர்கள் யாரும் அவரை போல் செய்யவில்லை.

அணைக்கட்டு தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி பங்காளிகள் போல் சண்டை போட்டு கொண்டு வருகின்றனர். தி.மு.க.வினர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் சட்டத்திற்கு புறம்பாக கல்குவாரிகளில் ரூ.200 கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மோடி ஆட்சி காலத்தில் 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளார். குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் நடந்து முடிவுகள் வந்த பிறகும் அவர்களுக்கு பணி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு நிச்சயமாக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். 9 தலைமுறைகளாக எனது குடும்பத்தில் யாரும் அரசு வேலை செய்யவில்லை. எனக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்தது. இந்த நிலைமை மாறி அரசு வேலை இல்லாத குடும்பத்திற்கு அரசு வேலை நிச்சயம் கிடைக்கும்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். தாமரைச் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்