மத்திய பிரதேசத்தில் இருந்து நரபலி அச்சத்தால் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த பெண் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மனுதாரர் ஷாலினி சர்மாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

Update: 2023-02-23 09:11 GMT

சென்னை,

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-

"நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர். எனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்த்ரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர். என்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார்.

ஏற்கெனவே, எனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க யாருக்கும் தைரியமில்லை.

நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17-ந்தேதி சென்னை வந்தேன். தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் என்னை, குடும்பத்தினரும், ஏ.பி.வி.பி. அமைப்பினரும் வலுக்கட்டாயமாக என்னை போபாலுக்கு கொண்டு சென்றுவிட்டால், என்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த பெண் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகம் போன்றவற்றை நம்பி நரபலி கொடுக்கப்படுவதை கேள்விப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து மனுதாரர் ஷாலினி சர்மாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஷாலினி சர்மாவின் பெற்றோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். அதே போல் இந்த விவகாரம் தொடர்பாக வளர்ப்புத் தாய் மீது பெண் அளித்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து போபால் காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்