பாகிஸ்தானில் தேர்தல் வன்முறை: 2 பேர் பலி; போலீசார் உள்பட 11 பேர் காயம்
போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரசு வாகனம் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது.;
கோப்பு படம்
லாகூர்,
பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி பொது தேர்தல் நடந்தது. நாடாளுமன்றம் மற்றும் 4 மாகாணங்களுக்காக நடந்த இந்த தேர்தல் நிறைவடைந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எனினும், அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.
இந்த சூழலில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியை சேர்ந்த, முந்தின அரசுகளில் மந்திரியாக பதவி வகித்தவரான அமீர் முகாம் என்பவர் என்.ஏ. 11 தொகுதியில் வெற்றி பெற்றார் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியை சேர்ந்த தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சுயேச்சை வேட்பாளரான சையது பரீன் என்பவருக்கு ஆதரவாக திரளானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரீனுக்கு பி.டி.ஐ. கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஷாங்லா மாவட்டத்தில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் பரீனின் ஆதரவாளர்கள் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனால், போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரசு வாகனம் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால், கலவரக்காரர்களை விரட்டுவதற்காக கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இந்த மோதலில் பரீனின் ஆதரவாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில், 6 போலீசாருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது.