இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல்; 600 பேர் பலி என அதிர்ச்சி தகவல்

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 600 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

Update: 2023-10-08 18:08 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நேற்று அதிரடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இஸ்ரேலும், பதில் தாக்குதலுக்கு தயாரானது. பதிலடியும் கொடுத்தது. இதனால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக டெல் அவிவ் நகருக்கான ஏர் இந்தியா விமானம் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை, அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு, இஸ்ரேலுக்கான முழு ஆதரவை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், இஸ்ரேல் சார்பில் இன்றிரவு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் ஏவுகணை தாக்குதலில் 600 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் கூறும்போது, இஸ்ரேலில் பலி எண்ணிக்கை 600 ஆக உயர்ந்து உள்ளது என அறிவிப்பதில் நாங்கள் உடைந்து போயுள்ளோம்.

இதில், தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு எங்களால் முடிந்தவரை நாங்கள் சிகிச்சைக்கான ஒவ்வொரு விசயமும் செய்து வருகிறோம். கூடுதலாக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.

இந்த அட்டூழியத்திற்கு பொறுப்பான ஹமாஸ் பயங்கரவாதிகள், இதற்கான அதிக விலையை கொடுப்பார்கள் என தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்