ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கு ஏற்ற அரசின் பங்கு வர்த்தக அமைப்பு

கட்டுமானத்துறையில் பங்கு முதலீட்டு வர்த்தக அடிப்படையில் முதலீடு செய்ய விருப்பம் உள்ள அனைவரும் பங்கேற்கும் விதமாக ரியல் எஸ்டேட் முதலீடு அறக்கட்டளை (Real Estate Investment Trust - REIT) அமைப்பு செயல்பட்டு வருகிறது.

Update: 2019-06-08 06:54 GMT
ட்டுமானத்துறையில் பங்கு முதலீட்டு வர்த்தக அடிப்படையில் முதலீடு செய்ய விருப்பம் உள்ள அனைவரும் பங்கேற்கும் விதமாக ரியல் எஸ்டேட் முதலீடு அறக்கட்டளை (Real Estate Investment Trust - REIT) அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India - SEBI) மூலம் அந்த அமைப்பு ஒழுங்குமுறை செய்யப்பட்டு வருகிறது. தற்போது பொது மக்களிடையே முதலீட்டை பெறும் நோக்கத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள REIT அமைப்பு ரியல் எஸ்டேட் நிறுவனம் போன்று செயல்படும்.

லாபம் பிரித்து அளிக்கப்படும்

பங்கு வர்த்தக நிறுவனங்கள், பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற முதலீடுகளை பங்குகள், அரசாங்க பத்திரங்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வது வழக்கம். அது போன்றே REIT அமைப்பும் பொது மக்களிடம் முதலீடுகளைப் பெற்று, அதனை நிலம் மற்றும் வீட்டு மனைகளில் முதலீடு செய்யும். அந்த முதலீடுகள் மூலம் ஈட்டப்படும் வாடகை வருமானம், நிலம் மற்றும் மனை விற்பனை மூலம் கிடைக்கும் ஆதாயம் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு பிரித்து அளிக்கப்படும்.

உடனடி விற்பனைக்கு உகந்தது

இதன் மூலம் முதலீட்டாளர்கள், ரியல் எஸ்டேட் துறையில் நேரிடையாக பணத்தை முதலீடு செய்யாமல் REIT அமைப்பின் மூலம் குறிப்பிட்ட அளவில் முதலீடு செய்து, அதற்கான வருவாயை ஈட்ட இயலும். நிலம் மற்றும் குடியிருப்புகள் வாடகை மூலம் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு வருமானம் கிடைக்கும். பின்னர், சில காலங்களுக்கு பிறகு அந்த மனை அல்லது குடியிருப்பு விற்கப்படும் நிலையில், அதற்கான மூலதன ஆதாய பலன் கிடைக்கும். முதலீட்டாளர்கள் REIT அமைப்பில் செய்த முதலீட்டை இடையில் திரும்ப பெற விரும்பும் நிலையில், சம்பந்தப்பட்ட யூனிட்டுகளை பங்குச் சந்தையில் (Stock Exchange) விற்பனை செய்து கொள்ளலாம்.

முதலீட்டாளர்களுக்கான பங்களிப்பு

ரியல் எஸ்டேட் முதலீடு அறக்கட்டளையில், முதலீட்டாளர்களுக்கு 75 சதவிகிதமும், நிறுவனம் அல்லாத மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு 25 சதவிகித பங்களிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானம், வரி நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஆனால், அதற்கான ஈவுத்தொகைக்கு (Dividend) வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வல்லுனர்கள் வழிகாட்டல்

REIT அமைப்பின், ஒழுங்குமுறை ஆணையமாக SEBI செயல்பட்டு வருவது, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அனுபவமிக்க தொழில் முறை நிர்வாகிகளை கொண்டு செயல்பட்டு வருவதால், ரியல் எஸ்டேட் துறை மூலம் தொடர்ச்சியாக வருமானம் பெற விரும்புபவர்களுக்கு நல்ல முதலீட்டு வாய்ப்பு என்று கட்டுமானத்துறை வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். ரியல் எஸ்டேட் துறையில் ஒரு மனையை வாங்கினால், உடனடியாக அதை விற்பனை செய்வது சிக்கலான விஷயம். ஆனால், REIT முதலீட்டின் மூலம், சந்தையில் ஒருவர் வைத்துள்ள மனைகளை அதாவது யூனிடுகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் விற்பனை செய்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்