அமைதியான சூழலை உருவாக்கும் வீட்டுத் தோட்டம்

நகர்ப்பகுதி மற்றும் புற நகர்ப்பகுதிகளில் தோட்டத்துடன் கூடிய பல வீடுகளை கவனித்திருப்போம். சில இடங்களில் வீட்டை விடவும் தோட்டம் அழகாக அமைந்திருக்கும்.

Update: 2019-08-10 10:16 GMT
வீடுகளின் வெளிப்புற தோற்றத்தை பார்வைக்கு அழகாக காட்டுவதுடன், மனதில் இனிமையான உணர்வையும் பசுமையான தோட்டங்களால் ஏற்படுத்த முடியும் என்று என்று நில வடிவமைப்பு வல்லுனர்கள் (Landcapist) குறிப்பிட்டுள்ளனர்.

‘லேண்ட்ஸ்கேப்பிங்’

புறநகர் பகுதிகளில் மனை அல்லது இடம் வாங்கி வீடு கட்ட விரும்புபவர்கள் வீட்டை சுற்றி அமைந்துள்ள இடத்தை அழகாக மாற்றிக்கொண்டு இதமான சூழலை வீட்டுக்குள் பரவச்செய்ய இயலும். அந்த முறை ‘லேண்ட்ஸ்கேப்பிங்’ (Lanscaping) என்று குறிப்பிடப்படுகிறது. மனையின் அளவுக்கேற்ப கிடைக்கும் காலி இடத்தில் அழகான தோட்டத்தை இந்த முறைப்படி சுலபமாக வடிவமைத்துக்கொள்ளலாம். அவற்றின் அமைப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை செய்து தரும் நில வடிவமைப்பு வல்லுனர்கள் நகர்ப்புறங்களில் உள்ளனர்.

அழகிய நடைபாதைகள்

வீட்டின் சுற்றுப்புறத்தில் தோட்டம் அமைக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் மேடு, பள்ளங்கள் கொண்டதாகவும், வளைவான அமைப்புகளைக் கொண்ட தோட்டங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். குறிப்பாக, பரப்பளவு குறைவாக உள்ள வீடுகளில் சிறிய புல்வெளி அமைத்து, அங்கே சில தனிச்செடிகள், சிலைகள் ஆகியவற்றை அமைக்கின்றனர். அவற்றின் இடையில் சதுரம் அல்லது செவ்வக வடிவ கற்கள் கொண்ட நடைபாதை அமைப்பதும் அழகாக இருக்கும்.

பயன் தரும் மரங்கள்

விசாலமான தோட்டம் அமைப்பதற்கு தகுந்த இடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட நிலையில் செடிகளுடன் குறிப்பிட மரங்களை தேர்வு செய்து வளர்க்கும் வீட்டு உரிமையாளர்கள் பலர் உண்டு. அழகான பூக்களை தரும் மரங்களான ‘அட்ஸ்டோனியா’, ‘மில்லங்டோனியா’ போன்ற மரங்கள் மற்றும் வேம்பு, புங்கை, பலா போன்ற மரங்களையும் பலர் விருப்பத்துடன் வளர்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

குதூகலமான மாலை நேரம்

வீட்டு தோட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மாலை நேரத்தில் காபி அருந்தும் வகையில் காபி மேசைகள், பெஞ்சுகள் போட்டு வைக்கலாம். மேசையின் நீளம் ஐந்து அடி மற்றும் அகலம் இரண்டு அடி இருக்கலாம். பல இடங்களில் ‘கான்கிரீட்’ காப்பி மேசைகளை அமைக்கின்றனர். ‘பாலீஷ்’ செய்யப்படாத கல் இருக்கைகள், கிரானைட் இருக்கைகள், இரும்பு அல்லது மரத்தால் செய்யப்பட்ட பெஞ்சுகளை போட்டு வைக்கலாம். அவை மாலை நேரங்களை இனிமையாக மாற்றும்.

இரவு நேரங்களில் வெளிச்சமாக இருக்க ‘போகஸ்’ விளக்குகளை மரங்களின் வேர்ப்பகுதி அல்லது குறிப்பிட்ட செடிகளின் கீழ்ப்புறத்தில் அமைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் விளக்கின் திசைகளை வேண்டியவாறு மாற்றி அமைத்து தோட்டத்தை அழகாக காட்ட இயலும். சிவில் கான்செப்ட் அடிப்படையில் ஆங்காங்கே ‘பெர்கோலா’ அமைப்புகளையும் வடிவமைக்கலாம்.

அமைதியான அதிகாலை நேரம்

தோட்டம் அமைந்துள்ள வீடுகளை குட்டி பசங்களின் மனம் கவரும் வகையில் எளிதாக மாற்றிக்கொள்ள இயலும். மத்தியில் ஒரு ஊஞ்சல் அமைத்து விட்டால், அவர்களது நண்பர்களுடன் விடுமுறை நாட்களில் குஷியாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். மேலும், ஆங்காங்கே பறவைகளுக்கான கூண்டுகள் அமைக்கலாம். அனைத்திற்கும் மேலாக, சிறிய அளவில் தியான குடில்கள் அமைத்துக்கொண்டால், அமைதியான அதிகாலை நேரங்களை அதில் செலவழிக்க ஏற்றதாக அமையும்.

மேலும் செய்திகள்