நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ; ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தல்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை ஸ்ரேயாஸ் அய்யர் பதிவு செய்துள்ளார்.

Update: 2020-02-05 05:23 GMT
ஹமில்டன், 

நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹமில்டன் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா (20 ரன்கள்) மயங்க் அகர்வால் (32 ரன்கள்) ஏமாற்றினர். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விராட் கோலி 51 ரன்கள் அடித்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்ரேயாஸ் அய்யருக்கு லோகேஷ் ராகுலும் பக்க பலமாக நின்று ஆடினார். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 101 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் அய்யர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். தனது 16-வது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர், முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். சிறப்பாக ஆடி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 107 பந்துகளில் 103 ( 11 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) ரன்கள் அடித்த நிலையில், சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். 

மேலும் செய்திகள்