பதும் நிசங்கா அசத்தல் சதம்: 2-வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றி

இலங்கை அணி 47.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

Update: 2024-03-15 19:59 GMT

image courtesy: Sri Lanka Cricket twitter

சட்டோகிராம்,

வங்காளதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணிக்கு லிட்டன் தாஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் வங்காளதேச அணிக்கு ரன் சீராக உயர்ந்தது.

50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த வங்காளதேசம் 286 ரன்களை குவித்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹரிடோய் 96 ரன்களும், சவுமியா சர்கார் 68 ரன்களும் குவித்தனர். இலங்கை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ டக் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 16 ரன்களும், சமரவிக்ரமா ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் பொறுப்புடன் ஆடிய பதும் நிசங்கா சதமடித்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய அசலங்கா அரை சதம் கடந்தார். பதும் நிசங்கா 114 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசலங்கா 91 ரன்னில் அவுட்டானார்.

இந்த நிலையில் இலங்கை அணி 47.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்