டி20 உலகக்கோப்பை: தோனி - தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யாரை விளையாட வைக்க விரும்புவீர்கள்..? ரோகித் அளித்த பதில்

டி20 உலகக்கோப்பையில் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யாரை விளையாட வைக்க விரும்புவீர்கள்? என்று ரோகித் சர்மாவிடம் சமீபத்திய நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது.

Update: 2024-04-18 07:55 GMT

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. கடைசியாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின் கடந்த 17 வருடங்களாக டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

கடைசியாக ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான செமி பைனலில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இம்முறை ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் இருக்கும் வீரர்களுடன்  களமிறங்கி இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் தோனி டெல்லிக்கு எதிராக 36 (17 பந்துகள்) ரன்கள் அடித்து அசத்தினார். அதை விட மும்பைக்கு எதிராக கடைசி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட அவர் சி.எஸ்.கே. வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

மறுபுறம் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 226 ரன்களை 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார். அதனால் மும்பைக்கு எதிரான போட்டியில் "உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காகவே எங்களை இப்படி அடிக்கிறீர்களா" என்று ரோகித் சர்மா அவரைப் பாராட்டியது வைரலானது.

இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையில் எம்.எஸ். தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யாரை விளையாட வைக்க விரும்புவீர்கள்? என்று கேப்டன் ரோகித் சர்மாவிடம் சமீபத்திய நிகழ்ச்சியில் ஜாலியாக கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா பதிலளித்தது பின்வருமாறு:-

"அவர்களுடைய ஆட்டம் என்னை கவர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். தோனியும் 4 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் எடுத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். கடைசியில் அந்த ரன்கள்தான் வெற்றியின் வித்தியாசமாக இருந்தது.

இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் செல்வதற்கு எம்.எஸ். தோனியை சம்மதிக்க வைப்பது கடினமாகும். மிகவும் களைப்படைந்து, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவர் அமெரிக்காவுக்கு கோல்ப் விளையாடுவதற்காக வருவார் என்று நினைக்கிறேன். ஆனால் தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது மிகவும் எளிது. இந்தியாவுக்கு விளையாட நானும் அவர் மீது கொஞ்சம் அழுத்தத்தை கொடுத்து வருகிறேன். ஐதராபாத் போட்டியின் முடிவில் அதைப்பற்றி அவரும் பேசினார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்