அவரைதவிர யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்த மாட்டார்கள்- துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் தயாரித்த லோகா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை குவித்து வருகிறது.;
துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் ‘லோகா’ படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 28 ம் தேதி வெளியானது.இப்படத்தில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சூப்பர்வுமன் படமாக உருவாகி இருக்கும் ‘லோகா’ எனும் மலையாளத் திரைப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார். மர்மங்கள் நிறைந்த கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரமும் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை குவித்து வருகிறது.
இந்த நிலையில், லோகா படத்தின் தயாரிப்பாளரான துல்கர் சல்மான், நிகழ்ச்சி ஒன்றில் லோகா படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, "நான் ஒரு ஹீரோவாக 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன், ஹீரோவாக நான் நடித்த எந்த படத்திற்கும் இவ்வளவு வரவேற்பை நான் பெற்றதில்லை. லோகா நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதை மிகப்பெரிய வெற்றியாக்கிய பார்வையாளர்களுக்கு நன்றி.
மேலும், கல்யாணி பிரியதர்ஷனை தவிர சந்திரா கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் பொருந்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவள் உடல் பயிற்சிக்காக உண்மையான முயற்சிகளை மேற்கொண்டார். நாங்கள் அவரிடம் அதனை பார்த்தோம். இன்றைய மீம்ஸ்கள் மற்றும் அவரை பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது" என்று கூறியுள்ளார்.