ரூ.100 கோடி கிளப்பில் இணையுமா 'மதராஸி'?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மதராஸி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.;

Update:2025-09-10 18:37 IST

கோப்புப்படம் 

ஒரு திரைப்படம் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.100 கோடியை கடந்தால் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. அந்த வகையில், ரஜினிகாந்த் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளிவந்த 'சிவாஜி' திரைப்படம் அந்த இலக்கை எட்டி, ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த முதல் தமிழ் படம் என்ற சிறப்பை பெற்றது.

தொடர்ந்து, கமல்ஹாசனின் 'தசாவதாரம்' (2008), விஜய்யின் 'துப்பாக்கி' (2012), அஜித்தின் 'ஆரம்பம்' (2013), விக்ரமின் 'ஐ' (2015), ரவி மோகனின் 'தனி ஒருவன்' (2015), கார்த்தியின் 'கைதி' (2019), சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' (2021), தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' (2022) என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

'டாக்டர்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்', 'அமரன்' ஆகிய திரைப்படங்கள் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மதராஸி' திரைப்படம் இந்தப் பட்டியலில் இணையுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரூ.125 கோடி பட்ஜெட்டில் உருவான 'மதராஸி' திரைப்படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமம் ரூ.80 கோடிக்கும், ஆடியோ ரூ.10 கோடிக்கும் விற்பனையானதாக கூறப்படுகிறது. ரூ.90 கோடி வசூலை திரைக்கு வருவதற்கு முன்பே 'மதராஸி' படம் எடுத்த நிலையில், படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில், உலக அளவில் 'மதராஸி' திரைப்படத்தின் வசூல் ரூ.76 கோடியை கடந்திருப்பதாக கூறப்படுகிறது.

வரும் 12-ந் தேதி புதிதாக 10 திரைப்படங்கள் ரிலீசாகும் நிலையில், 'மதராஸி' திரையிடப்பட்டிருக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது. என்றாலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்கள் கூட்டம் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வசூலிலும் ரூ.100 கோடியை கடந்து, ரூ.100 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்