கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆவணி பௌர்ணமி விழா
ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.;
அம்மனை தரிசனம் செய்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.
உலகப் புகழ் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பௌர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான ஆவணி பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது.
அதைத்தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையையும் நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தங்கக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. பின்னர் திருநடை அடைக்கப்பட்டது.
மாலை 4 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு இரவு 7 மணிக்குள் சாயராட்சை தீபாராதனை ஸ்ரீபலிபூஜை நடந்தது. பின்னர் அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்த நிகழ்ச்சி நடந்தது.
அதன்பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.