திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்

தீபாவளி ஆஸ்தான நிகழ்வின்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை, சிறப்பு ஆரத்தி, பிரசாத நிவேதனங்கள் ஆகியவை ஆகம முறையில் நடைபெற்றன.;

Update:2025-10-20 12:59 IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாரம்பரிய முறைப்படி இன்று தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது. தங்க வாயிலின் முன் அமைந்துள்ள கண்டா மண்டபத்தில் இந்த விழா நடைபெற்றது,

இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத மலையப்ப சுவாமி கண்டா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வபூபால வாகனத்தில் கருடாழ்வாரை நோக்கி அமர்த்தப்பட்டார். சேனாதிபதி விஷ்வக்சேனரும் சுவாமியின் இடதுபக்கத்தில் தெற்கு திசை நோக்கி இன்னொரு பீடத்தில் அமர்த்தப்பட்டார்.

அதன் பின்பு சுவாமிக்கு சிறப்பு பூஜை, சிறப்பு ஆரத்தி, பிரசாத நிவேதனங்கள் ஆகியவை ஆகம முறையில் நடைபெற்றன. இதனுடன் தீபாவளி ஆஸ்தானம் நிறைவடைந்தது.

தீபாவளி ஆஸ்தான நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், திருமலை மடாதிபதிகள் மற்றும் திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி சகஸ்ர தீபஅலங்கார சேவையில் பங்கேற்று, கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

தீபாவளி ஆஸ்தானம் காரணமாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவ சேவை ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்