திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 22-ந் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.;

Update:2025-10-14 17:50 IST

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் முக்கியமான கந்தசஷ்டி திருவிழா வருகிற 22-ந் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. 6-ம் திருநாள் வரை பகலில் யாகசாலையில் நடந்த தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

அங்கு மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான 27-ந் தேதி மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவிழா நாட்களில் தங்கியிருந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் ஆங்காங்கே தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் கடற்கரை பகுதியை சுத்தம் செய்யும் பணி, கடற்கரை மணலை சமன்படுத்தும் பணி, மின் விளக்குகள் பொருத்தும் பணி, பந்தல், பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்