திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: நாளை அங்குரார்ப்பணம்
திருவிழா கோலாகலமாகத் தொடங்க வேண்டும், வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதை குறிக்கவே அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி தொடங்கி அக்டோபர் 2-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை வைகானச ஆகம விதிபடி அங்குரார்ப்பணம் நடக்கிறது. மகா விஷ்ணுவின் அவதாரமான வெங்கடேஸ்வரசாமி விருப்பப்படி படைப்பு கடவுளான பிரம்மா நடத்தும் 9 நாள் பிரம்மோற்சவத்தின் முன்பாக செய்யப்படும் நிகழ்ச்சியே ‘அங்குரார்ப்பணம்’ எனப்படுகிறது.
கோவிலில் எந்தவொரு திருவிழாவை நடத்தினாலும், அது கோலாகலமாகத் தொடங்க வேண்டும், வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதை குறிக்கவே அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நவதானிய விதைகளின் முளைப்பு
அங்குரார்ப்பணத்தின்போது 9 மண்பானைகளில் நவதானியங்கள் தூவப்படும். அந்த விதைகளில் இருந்து வெளிவரும் முளைகள் நல்ல அதிர்ஷ்டத்தையும், விழாவின் வெற்றிகரமான நிறைவையும் குறிக்கின்றன.
ஆரம்பத்தில் பூமிக்கு அதாவது, பூதேவிக்கு சிறப்புப் பிரார்த்தனை மற்றும் ‘மேதினி பூஜை’ செய்வதன் மூலம் ஆசீர்வாதங்கள் கோரப்படுகிறது. பின்னர் அங்குரார்ப்பணம் அல்லது பீஜவபனம் கோவிலில் வைகானச ஆகம விதிபடி செய்யப்படும்.
அங்குரார்ப்பணம் என்பது 14 உலகங்களின் உள்ள அனைத்துத் தெய்வங்களுக்கும், 9 கிரகங்கள் உள்பட வான உடல்களுக்கும், 8 திசைகளின் பாதுகாவலர்களுக்கும் அழைப்பு விடுப்பதைக் குறிக்கிறது. அங்குரார்ப்பணம் எப்போதும் இரவில் குறிப்பிட்ட நல்ல நேரத்தில் செய்யப்படுகிறது.
மூலவருக்கு சமர்ப்பணம்
விதைகளை மண் பானைகளில் விதைத்து, அவை வெவ்வேறு திசைகளில் வைக்கப்படுகின்றன. 9 நாட்களில் விதைகள் முளையிட்டு, நாற்றாக வளர்ந்திருக்கும். இறுதி நாளில், நாற்றுகள் முளைகளில் இருந்து பிரிக்கப்பட்டு, மூலவர் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்தச் செயல்முறை ‘அக்ஷதரோபனம்’ என்று அழைக்கப்படுகிறது. அங்குரார்ப்பணத்தில் விதைகளின் புனித முளைப்பு, பிரம்மோற்சவங்களை பிரமாண்டமாகவும் அற்புதமாகவும் நடத்துவதைக் குறிக்கிறது. அங்குரார்ப்பண நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.
விஷ்வக்சேனர் உலா
அங்குரார்ப்பணம் செய்வதற்கு முன், ஏழுமலையானின் தலைமை தளபதியான விஷ்வக்சேனர் (உற்சவர்) தனது எஜமானரின் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? என்பதை காண திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து மேற்பார்வையிடுகிறார்.