திருப்பதி பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள்.. தேவஸ்தான தலைவர் ஆய்வு
பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு தேவஸ்தான தலைவர் உத்தரவிட்டார்.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 24-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாகனச் சேவையின்போதும், கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யும்போதும் பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை பிரமாண்டமாக நடத்த முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இருக்கக்கூடாது. வாகனச் சேவை வழிபாட்டின்போது கேலரிகளில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மின் விளக்கு அலங்காரப் பணியில் சிறப்பு கவனம் செலுத்தி, அதை கவர்ச்சியாக வடிவமைக்கப்படும். திருமலையில் நான்கு மாடவீதிகளுக்கு வந்து வாகனச் சேவையை தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக 35 அகண்ட ஒளித்திரைகள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
ஆய்வின்போது தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால், கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் உடனிருந்தனர்.