பீகார் தேர்தலில் போட்டியிட்ட 25 மந்திரிகள் வெற்றி - ஒருவர் தோல்வி

ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 8 மந்திரிகளும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.;

Update:2025-11-16 06:46 IST

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலில் 202 தொகுதி களை கைப்பற்றி பா.ஜனதா கூட்டணி இமாலய வெற்றி பெற்றது. அந்த அணி அசுர பலத்துடன் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை தக்கவைத்தது. இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 26 மந்திரிகளில் 25 பேர் வெற்றி பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜனதாவை சேர்ந்த துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா இருவரும் தாராபூர் மற்றும் லக்கிசராய் சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றனர். மேலவை உறுப்பினராக இருக்கும் முதல்-மந்திரி நிதிஷ் குமார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

பா.ஜனதாவை சேர்ந்த மொத்தம் 15 மந்திரிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதேபோல ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 8 மந்திரிகளும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜனதாவின் மூத்த உறுப்பினரான வேளாண் மந்திரி பிரேம் குமார், கயா டவுன் தொகுதியில் தொடர்ந்து 8-வது முறையாக வென்று, தொகுதியை தனதாக்கினார். இதேபோல ஐக்கிய ஜனதா தள மந்திரி பிஜேந்திர யாதவும் தான் போட்டியிட்ட தொகுதியில் 8-வது முறையாக வெற்றி பெற்றார்.

இருப்பினும், 2020-ம் ஆண்டு சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட சுமித் குமார் சிங், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மீண்டும் களம் கண்டபோது, சாகை சட்டமன்றத் தொகுதியில் ராஷ்டிரீய ஜனதா தள வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

Tags:    

மேலும் செய்திகள்