ரீல்ஸ் மோகம்... வேறொருவருடன் பழக்கம்... 26 வயது இளம்பெண்ணை எரித்து கொன்ற 52 வயது காதலன்
வனஜாக்ஷி என்ற இளம்பெண்ணுடன், 52 வயது விட்டலுக்கு பழக்கம் ஏற்பட்டது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா மல்லனசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் விட்டல் (வயது 52). டிரைவரான இவர், கார் ஓட்டி வருகிறார் இவர் 2 பெண்டாட்டிக்காரர். முதல் மனைவி உயிரிழந்த பின்பு 2-வது ஒரு பெண்ணை விட்டல் திருமணம் செய்திருந்தார். அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் விட்டலுடன் வாழ பிடிக்காமல், அந்த நபருடன் அப்பெண் ஓடிவிட்டார்.
இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மல்லனசந்திராவை சேர்ந்த வனஜாக்ஷி (26) என்ற இளம்பெண்ணுடன், விட்டலுக்கு பழக்கம் ஏற்பட்டது. வனஜாக்ஷிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது கணவர் இறந்து விட்டார். இதனால் விட்டல், வனஜாக்ஷி இடையே இருந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்யாமலேயே மல்லனசந்திரா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
வனஜாக்ஷி ரீல்ஸ் மோகம் கொண்டவர். அடிக்கடி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். தந்தை வயதான தனது காதலன் விட்டலுடன் சேர்ந்து சில வீடியோக்களை வானஜாக்ஷி வெளியிட்டு இருந்தார். இதற்கிடையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி பன்னரகட்டாவில் இருந்து பசவனபுராவை நோக்கி ஒரு நபருடன் வனஜாக்ஷி காரில் சென்றார். இதுபற்றிய தகவல் விட்டலுக்கு கிடைத்தது.
உடனே வனஜாக்ஷி சென்ற காரை தன்னுடைய காரில் அவர் பின்தொடர்ந்து சென்றார். உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொம்மதேவனஹள்ளி பகுதியில் வனஜாக்ஷி சென்ற காரை, விட்டல் தடுத்து நிறுத்தினார். பின்னர் அந்த நபருடன் எதற்காக செல்கிறாய்? என்று கேட்டு வனஜாக்சியுடன் விட்டல் சண்டை போட்டதாக தெரிகிறது. அவர்களுக்குள் வாக்குவாதமும் உண்டானது.
உடனே ஆத்திரமடைந்த விட்டல், தன்னுடைய காரில் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து, வனஜாக்ஷி இருந்த கார் மீது ஊற்றி தீவைக்க முயன்றார். உடனே வனஜாக்சியும், அவரது நண்பரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். ஆனாலும் அவர்களை விடாமல் விட்டல் விரட்டி சென்றார். பின்னர் வனஜாக்சியை மடக்கி பிடித்த விட்டல், நடுரோட்டில் வைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றினார். மேலும் சிகரெட் புகைக்க பயன்படுத்தும் லைட்டர் மூலமாக வனஜாக்ஷி உடலில் அவர் தீவைத்தார்.
இதனால் அவர் நடுரோட்டில் உடலில் தீப்பிடித்து உயிருக்கு போராடினார். பின்னர் அங்கிருந்து விட்டல் காரை எடுத்து சென்று விட்டார். வனஜாக்ஷி உடலில் பிடித்த தீயை, அவரது நண்பர் உள்பட அங்கிருந்தவர்கள் அணைத்தார்கள். பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய வனஜாக்ஷி விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் 60 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டு இருந்ததால், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து உளிமாவு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட விட்டலை வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில், விட்டலை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, கணவர் உயிரிழந்த பின்பு விட்டலுடன் கடந்த சில ஆண்டுகளாக வனஜாக்ஷி வசித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அவருக்கும், வேறொரு நபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விட்டலுடன் பேசி, பழகுவதை வனஜாக்ஷி தவிர்த்து வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு கடந்த 1½ மாதங்களாக தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
அந்த நபருடன் நட்பாக தான் பழகுவதாக வனஜாக்ஷி தெரிவித்துள்ளார். இதனை ஏற்க விட்டல் மறுத்துள்ளார். மாறாக கடந்த 30-ந் தேதி அந்த நபருடன் வனஜாக்ஷி காரில் செல்வதை கண்டு ஆத்திரமடைந்த விட்டல், நடு ரோட்டில் வனஜாக்சியை உயிருடன் எரித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. கைதான விட்டலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட தகவலை சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் ரமேஷ் பானூத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.
இதற்கிடையில், கொம்மதேவனஹள்ளியில் வனஜாக்ஷியை பெட்ரோல் கேனுடன் விட்டல் விரட்டி செல்வது மற்றும் தீக்காயங்களுடன் சாலையோரம் அமர்ந்து வனஜாக்ஷி உயிருக்கு போராடும் வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.