79-வது இந்திய சுதந்திர தினம்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து
நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.;
மாஸ்கோ,
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவின் முத்தாய்ப்பான டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டு இருந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், “அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. உலக அரங்கில் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்களிக்கிறது. கூட்டு முயற்சிகள் மூலம் இந்திய - ரஷ்ய ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவோம். பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு, உறுதித்தன்மையை வலுப்படுத்துவதை இருநாடுகளும் ஆதரிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.