திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணிடம் ரூ.40 லட்சம் நகை, பணம் மோசடி - காதலன், தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு

திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணிடம் ரூ.40 லட்சம் நகை, பணத்தை மோசடி செய்ததாக காதலன், அவரது தாய் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-10-20 21:35 IST

பெங்களுரு,

கர்நாடக மாநிலம் பெங்களுரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் சென்னபட்டணா அருகே ஷெட்டிஹள்ளி லே-அவுட்டைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அப்பிகெரேயை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இளம்பெண்ணும், கிருஷ்ணமூர்த்தியும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இளம்பெண்ணை திருமணம் செய்வதாகவும் கிருஷ்ணமூர்த்தி உறுதி அளித்தார்.

இதனால் கிருஷ்ணமூர்த்திக்கு விலை உயர்ந்த செல்போன்களை ஒவ்வொரு ஆண்டும் இளம்பெண் பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அவர் கேட்கும் போதெல்லாம் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்து இளம்பெண் பணத்தை எடுத்து வந்து கொடுத்துள்ளார். தொழில், வியாபாரம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் இருந்து பல லட்சம் ரூபாய், தங்க நகைகளை கிருஷ்ணமூர்த்தி வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், இளம்பெண்ணுடன் இருந்த காதலை முறித்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி, அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தான் கொடுத்த பணம், நகைகளை திரும்ப கொடுக்கும்படி கேட்டதால், இளம்பெண்ணுக்கு கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னபட்டணா போலீசில் கிருஷ்ணமூர்த்தி, அவரது தாய் சித்தம்மா, அண்ணன் மனோஜ் மீது இளம்பெண் புகார் அளித்தார்.

அதில், கடந்த 6 ஆண்டுகளாக தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ரூ.25 லட்சம் ரொக்கம், 137 கிராம் தங்க நகைகள், 6 விலை உயர்ந்த செல்போன்கள் உள்பட ரூ.40 லட்சம் வரை வாங்கி தன்னிடம் மோசடி செய்து விட்டதாகவும், பணம், நகைகளை கேட்டால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில், 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்