அண்ணன் தற்கொலைக்கு பழிவாங்க தொழிற்சங்க தலைவர் மகளை கொடூரமாக கொன்ற வாலிபர்

மஞ்சுநாத்தின் அண்ணன் வினோத், சிமெண்டு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.;

Update:2025-09-20 04:52 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா மல்கேடா கிராமத்தைச் சேர்ந்தவர் சென்மபசப்பா, இவர் அங்குள்ள சிமெண்டு தொழிற்சாலையில், தொழிற்சங்க தலைவராக இருந்து வருகிறார். இவரது மகள் பாக்யஸ்ரீ (வயது 20), இவர் இன்னும் ஒரு மாதத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர இருந்தார்.

இந்நிலையில் கடந்த 11-ந் தேதி பாக்யஸ்ரீயும் அவரது அக்காளும் வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்றனர். பின்பு அவரது அக்காள் அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அவருக்காக கடையின் வெளியில் பாக்யஸ்ரீ காத்து நின்று கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் பொருட்களை வாங்கிவிட்டு அவரது அக்காள் திரும்பி வந்து பார்த்த போது பாக்யஸ்ரீ கடையின் வெளியில் இல்லை. பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போதும் அங்கும் அவர் இல்லை. திடீரென மாயமாகிவிட்டார். இதையடுத்து பாக்யஸ்ரீயை அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் அவர் காணாமல் போனதை உணர்ந்த குடும்பத்தினர் மல்கேடா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை மல்கேடா பகுதியில் உள்ள சிமெண்டு தொழிற்சாலையின் அருகில் உள்ள கால்வாயில் பாக்யஸ்ரீயின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் காயங்களும் இருந்தன. அவரை யாரோ இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் போலீசார் சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மஞ்சுநாத் என்பவர், பாக்யஸ்ரீயை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து மஞ்சுநாத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

அதாவது, மஞ்சுநாத்தின் அண்ணன் வினோத், சிமெண்டு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு பணி நிரந்தரம் செய்ய விடாமல் தொழிற்சங்க தலைவரான சென்மபசப்பா தடுத்துள்ளார். இதுபற்றி வினோத் தனது குடும்பத்தினரிடம் கூறி புலம்பி வந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தால் மனம் உடைந்த வினோத் தற்கொலை செய்துள்ளார்.

இதனால் அண்ணன் தற்கொலைக்கு சென்மபசப்பா தான் காரணம் என்றும், எனவே அவரது குடும்பத்தில் ஒருவரை கொலை செய்வேன் என்று மஞ்சுநாத் கூறி வந்துள்ளார். அவரை அவரது நண்பர்கள், உறவினர்கள் சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

இருப்பினும் அண்ணனின் தற்கொலைக்கு காரணமான தொழிற்சங்க தலைவர் சென்மபசப்பாவை பழிவாங்க அவரது மகள் பாக்யஸ்ரீயை கடத்திச் சென்று தலையில் இரும்பு கம்பியால் தாக்கி மஞ்சுநாத் கொடூரமாக கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்