சகோதரி உறவு முறை கொண்ட சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்டு
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவாகி இருந்தது.;
பெங்களூரு,
பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ரகு என்ற சிக்கராஜ் (வயது 25). இவரது வீட்டுக்கு ரகுவின் சித்தி தனது மகளுடன் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வந்திருந்தார். பின்னர் ரகு, அவரது பெற்றோர், அவரது சித்தியின் குடும்பத்தினர் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினார்கள்.
அந்த சந்தர்ப்பத்தில் சித்தியின் மகளான சகோதரி உறவு முறை கொண்ட சிறுமியை ரகு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உளிமாவு போலீஸ் நிலையத்தில் ரகு மீது போக்சோ வழக்குப்பதிவாகி இருந்தது. இந்த வழக்கில் உளிமாவு போலீசார், விசாரணையை முடித்து பெங்களூரு போக்சோ சிறப்பு கோர்ட்டில் ரகுவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியை பலாத்காரம் செய்தது ஆதாரத்துடன் நிரூபணமானதால், ரகுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு கர்நாடக சட்ட சேவை ஆணையம் ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.