டெல்லி - வாஷிங்டன் இடையிலான விமான சேவையை நிறுத்தி வைக்க ஏர் இந்தியா முடிவு
நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் இருந்து வாஷிங்டன் செல்லும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும்;
புதுடெல்லி,
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமான விபத்தை தொடர்ந்து, பயணிகள் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ஏர் இந்தியா நிறுவனம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இதன்படி, 26 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, டெல்லி- வாஷிங்டன் இடையேயான நேரடி விமான சேவையை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்த உள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; -
நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு திறனை உறுதி செய்யும் பணி நடைபெறுகிறது. இதற்காக டெல்லி - வாஷிங்டன் இடையிலான விமான சேவை அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.'போயிங் 787' விமானங்களின் மீதான மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக, 26 விமானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், விமானங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிவரை இந்த நிலை நீடிக்கும்.அதேசமயம், அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து வாஷிங்டன் செல்லும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும்.கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் உட்பட வட அமெரிக்காவின் ஆறு இடங்களுக்கும், ஏர் இந்தியா தொடர்ந்து நேரடி விமானங்களை இயக்கும்” என்று தெரிவித்துள்ளது.