கும்பல் பலாத்காரத்தில் பிறந்த குழந்தை பலி; வாழ்வின் ஒரே நம்பிக்கையையும் இழந்து சிறுமி வேதனை
பெண் குழந்தைக்கு மரபணு பரிசோதனை நடத்தப்படும் என காவல் நிலைய உயரதிகாரி அஜித் குமார் கூறியுள்ளார்.;
வாரணாசி,
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் 2024-ம் ஆண்டு டிசம்பரில் 17 வயது சிறுமி, 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கர்ப்பிணியான, அந்த பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி இரவில், ஆட்டோவில் பிரசவத்திற்காக அழைத்து செல்லப்பட்டபோது வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது.
அப்போது குழந்தைக்கு தாயாகவும், தந்தையாகவும் இருப்பேன் என தாயான அந்த சிறுமி கூறினார். இந்நிலையில், நேற்று மகளுக்கு பால் புகட்டி விட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து விட்டு குழந்தையை தாய் படுக்க வைத்துள்ளார்.
ஆனால், வாந்தி எடுத்து, மூச்சு திணறி அந்த குழந்தை உயிரிழந்து உள்ளது. இதனை சவுபிபூர் காவல் நிலைய உயரதிகாரி அஜித் குமார் கூறியுள்ளார்.
அந்த பெண் குழந்தைக்கு மரபணு பரிசோதனை நடத்தப்படும். இந்த விவகாரத்தில், சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றார். கடந்த வெள்ளி கிழமை ஒருவரும், தேடப்பட்டு வந்த கடைசி நபர் நேற்றும் என மொத்தமுள்ள 7 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
சம்பவம் பற்றி அந்த பெண் வேதனையுடன் கூறும்போது, அந்த குழந்தைக்கு கல்வி அளித்து நன்றாக வளர்க்க முடியும் என நினைத்தேன். அவளுடைய ஆதரவிலேயே வாழ்க்கை கழியும் என நினைத்தேன். ஆனால், அந்த நம்பிக்கையும் போய் விட்டது என துயரத்துடன் கூறினார்.