விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் தலைவர் கார்கே
விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர்;
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று முன் தினம் மதியம் 1.39 மணியளவில் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.
புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்கள் உள்பட 29 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 270 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து நடைபெற்ற பகுதியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கார்கே உடன் கர்நாடக துணை முதல்-மந்திரி டிகே சிவக்குமார் உள்பட காங்கிரஸ் தலைவர்களும் சென்றனர்.