இமாச்சல்: கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற எம்.பி. கங்கனாவுக்கு மக்கள் எதிர்ப்பு
பாதிக்கப்பட்ட மக்களை இவ்வளவு தாமதமாக வந்து சந்தித்ததால் மக்கள் கங்கனாவின் மீது அதிருப்தி அடைந்தனர்.;
சிம்லா,
இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல மக்கள் அவர்களது வாழ்வாதரத்தை மற்றும் சொந்தங்களை இழந்தனர். இந்நிலையில் நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ரனாவத் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை இவ்வளவு தாமதமாக வந்து சந்தித்ததால் மக்கள் கங்கனாவின் மீது அதிருப்தி அடைந்தனர். அந்த அதிருப்தியை `வெளியே போ கங்கனா!" என்ற முழக்கங்களை எழுப்பி வெளிப்படுத்தினர்.
இதனால் பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் நடந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை நிலவியது. அப்போது பொது மக்களிடம் பேசிய கங்கனா ரனாவத்"நான் இங்குதான் வாழ்கிறேன், என் வீடும் நிலமும் இங்குதான் இருக்கிறது. நானும் நஷ்டத்தை சந்தித்துள்ளேன். என்னுடைய உணவகம் மூலம் வெறும் 50 ரூபாய் மட்டுமே வருமானம் வந்தது. ஆனால் நான் 15 லட்சம் ரூபாய் உணவகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நானும் ஒரு மனுஷி தான். தயவு செய்து என்னை இங்கிலாந்து ராணி போல், உங்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறவளாக தாக்க வேண்டாம். நானும் இங்குதான் வாழ்வை நடத்திக் கொண்டு இருக்கிறேன்," என கங்கனா கூறினார்.
கங்கனா இதுபோல் கூறியது மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. இவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மழைக்காலப் பெருவெள்ளத்தால் இமாச்சலப் பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது தொகுதியை மிகவும் அலட்சியமாக நடத்துவதாக மக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈட்டுபட்டு வருகின்றனர்.