பீகார் மாநில தேர்தல் களம் எப்படி?
பீகாரில் நீண்ட காலமாக முதல்-மந்திரி பதவியில் நிதிஷ்குமார் இருந்து வருவதால் அது மக்களிடையே ஒருவித சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.;
பாட்னா,
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்துக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6, 11-ந் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கு தற்போது, நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கு பணியாற்றி வருகிறது.
ஆனால், ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், தேஜஸ்வி யாதவின் (லாலு பிரசாத் யாதவின் மகன்) ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்த மகா பந்தன் கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மற்றொரு பக்கம் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் வரிசை கட்டி களத்தில் நிற்கின்றன.
பீகார் மாநில தேர்தல் களத்தில் இத்தனை கட்சிகள் இருந்தாலும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.பீகாரில் 18 ஆண்டுகளுக்கு மேலாக முதல்-மந்திரி பதவியில் நிதிஷ்குமார் இருந்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அந்தப் பதவியில் அவர் தொடர்கிறார். இதுவரை 9 முறை முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ள நிதிஷ்குமார், 10-வது முறையாக அந்தப் பதவியில் தொடர்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆளும் கூட்டணியில் (ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க.) இதுவரை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. ஐக்கிய ஜனதா தளம் 107 இடங்களிலும், பா.ஜ.க. 105 இடங்களிலும், மத்திய மந்திரிகளான சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தியும், ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவும்,மேல்-சபை எம்.பி.யான உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்டிரிய லோக்சபா கட்சியும் மீதமுள்ள 31 தொகுதிகளை பிரித்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம், வாக்கு திருட்டுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவை தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி பீகாரில் பேரணி நடத்தினார். இது அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் பல்வேறு மக்கள் நல திட்டங்களை அங்கு அறிவித்தார். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, மாணவர்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஏராளமான சலுகைகளையும் அவர் அறிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திரமோடியும் சமீபத்தில் பீகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதல் வலுசேர்க்கும் என்று நம்பப்படுகிறது.
பீகாரில் நீண்ட காலமாக முதல்-மந்திரி பதவியில் நிதிஷ்குமார் இருந்து வருவதால் அது மக்களிடையே ஒருவித சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின்போது அவரது செயல்பாடு, மக்கள் மத்தியில் ஒருவித எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. மேலும், கூட்டணியில் உள்ள பா.ஜ.க., உயர் சாதியினரின் கட்சியாக மக்களிடையே பார்க்கப்படுவதால் இந்தக் கூட்டணிக்கு சற்று எதிர்ப்பான நிலையே நீடிக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான மகா பந்தன் கூட்டணியிலும் தொகுதி பங்கீடு இன்னும் முடிந்த பாடில்லை. அந்தக் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் (மார்க்சிஸ்ட் லெனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), விகாஷீல் இன்சான், ஜார்க்கெண்ட் முத்தி மோர்சா, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.வாக்காளர்களில் சுமார் 30 சதவீதம் உள்ள முஸ்லிம் - யாதவ் சமூக வாக்கு வங்கியை ராஷ்டிரிய ஜனதா தளம் தன் வசம் வைத்துள்ளது. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்த லாலு பிரசாத் யாதவ் ஒதுங்கியுள்ள நிலையில் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் கட்சியின் தலைவராக முன்னுறுத்தப்பட்டுள்ளார். இளைஞர்கள் மத்தியில் தேஜஸ்வி யாதவுக்கு கணிசமான ஆதரவு உள்ளது.
அதே நேரத்தில், பிரசாந்த் கிஷோர் கட்சியான ஜன்சுராஜ் கட்சி 243 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. வரும் 9-ந் தேதி வேட்பாளர்களை அறிவிப்பதுடன், தானும் தேர்தலில் களம் காண இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். தனது கட்சிக்கு 28 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறிவரும் நிலையில், போட்டியில் இருந்து அவரது கட்சியையும் புறம்தள்ளிவிட முடியாது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
முதற்கட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே சாதகமாக அமைந்தாலும் பிரசாரம் இனிதான் சூடுபிடிக்கும் என்பதால், நிலைமை மாறுக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், பீகாரில் ஆட்சியை கைப்பற்றுவதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான மகா பந்தன் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.