ரஷியாவிடம் ரூ.25,500 கோடிக்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா

இந்தியாவின் இறக்குமதி பட்டியலில் கச்சா எண்ணெய் முதலிடம் பிடித்துள்ளது.;

Update:2025-11-17 07:12 IST

புதுடெல்லி,

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. அதையடுத்து, ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. குறிப்பாக, ரஷியாவின் எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில், பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

அதனால், ரஷியா புதிய நாடுகளை தேடத் தொடங்கியது. கச்சா எண்ணெய்க்கு தள்ளுபடி அறிவித்தது. அந்த தள்ளுபடி சலுகை, இந்தியாவை கவர்ந்தது. அதனால், அதற்கு முன்பு தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1 சதவீதத்தை ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்து வந்த இந்தியா, குறுகிய காலத்தில், இறக்குமதியை 40 சதவீதமாக உயர்த்தியது.

இதற்கிடையே, கடந்த மாதம் 22-ந் தேதி, ரஷிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான ரோஸ்நெப்ட், லுகோயில் ஆகியவை மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்தது. இதைத்தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.பி.சி.எல்.-மிட்டல் எனர்ஜி, மங்களூர் சுத்திகரிப்பு நிறுவனம் ஆகியவை இப்போதைக்கு ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளன.

அதே சமயத்தில், புதிய பொருளாதார தடைக்கு முன்பே ரஷியாவிடம் அதிக தொகைக்கு இந்தியா இறக்குமதி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து எரிசக்தி மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம் என்ற ஐரோப்பிய சிந்தனை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ரஷியாவிடம் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ரஷியாவிடம் இருந்து இந்தியா ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருந்தது. அக்டோபர் மாத இறக்குமதியிலும் மாற்றம் இல்லை.

புதிய பொருளாதார தடைக்கு முன்பே அதே அளவு தொகைக்கு இந்தியா இறக்குமதி செய்து விட்டது. இந்தியாவின் இறக்குமதி பட்டியலில் கச்சா எண்ணெய் முதலிடம் பிடித்துள்ளது. இறக்குமதியில் கச்சா எண்ணெய் 81 சதவீதமாகவும், நிலக்கரி 11 சதவீதமாகவும், எண்ணெய் பொருட்கள் 7 சதவீதமாகவும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்