இந்தியா மிகவும் துடிப்பான பொருளாதார நாடு... சிலருக்கு அது பிடிக்கவில்லை; ராஜ்நாத் சிங்

தொழிற்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.;

Update:2025-08-10 16:04 IST

போபால்,

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ஆனால், ரஷியாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால், இந்திய பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், இந்தியாவும், ரஷியாவும் இறந்த பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் என்று டிரம்ப் விமர்சித்தார். இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்தியபிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதேவது,

தற்போதைய சூழ்நிலையில் உலகில் துடிப்பான, துணிச்சலான பொருளாதாரத்தை கொண்ட நாடு என்றால் அது இந்தியாதான். உலகில் வேகமாக வளர்ந்துவரும் நாடு இந்தியாதான். அது சிலருக்கு பிடிக்கவில்லை. நாம் எல்லோருக்கும் முதலாளி என்று அவர்கள் நினைக்கின்றனர். இந்தியா எப்படி வேகமாக முன்னேறி செல்லலாம்? என நினைக்கின்றனர். பலர் ஏதாவது செய்ய முயற்சிக்கின்றனர். ஆகையால், பொருட்கள் இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனைக்கு செல்லும்போது அந்த பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. அந்தந்த நாடுகளில் தயாரிக்கும் பொருட்களை விட விலை அதிகமாக உள்ளது. இந்தியா முன்னேறி செல்லும்போது அதன் மக்களும் முன்னேறுகின்றனர். ஏனென்றால், நாட்டு மக்கள் முன்னேறாதபோது நாடும் முன்னேறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்