கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தவெக மேல்முறையீடு

சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.;

Update:2025-10-08 11:39 IST

புதுடெல்லி,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சூழ்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில், சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி, ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு கடந்த 5-ம் தேதி தனது விசாரணையை தொடங்கியது. அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தை சிறப்பு புலனாய்வுக்குழுவினர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அப்போது கரூர் சைபர்கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன், கரூர் தனிப்படை போலீஸ்காரர் மோகன் ஆகியோர் நடந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் எடுத்துரைத்தனர்.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மேலும், காயம் அடைந்தவர்களிடம் இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.

இந்த நிலையில், கரூர் துயரச் சம்பவத்தை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தவெக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர வழக்காக விசாரிக்க கோரி தவெக சார்பில் ஆஜரான வக்கீல் முறையீடு செய்தார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தவெக மனு 10-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்