மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு விதித்த விவகாரம்: கேரள கவர்னர் பரபரப்பு குற்றச்சாட்டு

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் காலவரம்பை நிர்ணயம் செய்தது வரம்பு மீறிய செயல் என கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் குற்றம்சாட்டியுள்ளார்.;

Update:2025-04-18 21:49 IST

திருவனந்தபுரம்,

தமிழ்நாட்டில் கவர்னர் கிடப்பில் போட்ட பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு பிரிவின் கீழ் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கை, மாநில கவர்னர்களின அதிகாரத்தை குறைத்தது மட்டுமின்றி, ஜனாதிபதிக்கும் கெடு விதித்தது பேசும் பொருளாக மாறியது.

இந்த உத்தரவு தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அரசியல் சாசனத்தில் காலவரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலவரம்பை நிர்ணயிக்க அரசியல் சாசனம் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் இணைந்து மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலவரம்பை நிர்ணயம் செய்துள்ளனர். இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது வரம்பு மீறிய செயல் ஆகும். இது தொடர்பாக நீதிபதிகள் மத்திய அரசுக்கு தங்கள் பரிந்துரையை வழங்கி இருக்கலாம்.அல்லது கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி இருக்கலாம். எல்லா முடிவுகளையும் கோர்ட்டுகளே எடுக்கும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு? சட்டசபைகள் எதற்கு?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்