கேரளா: நீண்ட நாட்களுக்கு பின் புறப்பட்டு சென்ற இங்கிலாந்து போர் விமானம்
இங்கிலாந்து போர் விமானம் இன்று காலை 10.50 மணியளவில் ஆஸ்திரேலியா நாட்டின் டார்வின் நகருக்கு புறப்பட்டு சென்றது.;
திருவனந்தபுரம்,
இங்கிலாந்தின் கடற்படையை சேர்ந்த எப்-35 பி என்ற நவீன போர் விமானம் ஒன்று, கடந்த ஜூன் 14-ந்தேதி கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
உலகின் அதிநவீன போர் விமானம் என அறியப்படும் இந்த விமானம் பல வாரங்களாக கேரளாவை விட்டு கிளம்பாமல் இருந்தது. இது ஏன்? என்ற தகவல் வெளியிடப்படாமல் இருந்தது. இதனை பயன்படுத்தி, கேரள சுற்றுலா கழகம் வாசகம் ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, ஒருமுறை வந்து விட்டால், கிளம்பி செல்வதற்கு மனமில்லாத அளவுக்கு இயற்கை வளம் நிறைந்தது கேரளா என விளம்பரப்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்று காலை 10.50 மணியளவில் ஆஸ்திரேலியா நாட்டின் டார்வின் நகருக்கு அந்த விமானம் புறப்பட்டு சென்றது.
அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கம் செய்யப்பட்டது என்றும் பராமரிப்பு பணிக்கு பின்னர் கிளம்பி சென்றுள்ளது என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒரு விமானம், ஏறக்குறைய ரூ.950 கோடி மதிப்பு கொண்டது.