இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: தந்தை, மகள் உள்பட 4 பேர் பலி; 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
இமாசல பிரதேசத்தில் கனமழையால் ரூ.3,056 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.;
சிம்லா,
இமாசல பிரதேசத்தின் சிம்லா நகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில், கடந்த 24 மணிநேரத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் சிக்கி தந்தை, மகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவுகளால், சிம்லா-கல்கா பகுதியில் செல்லும் 6 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 793 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.
சிம்லாவில் நேற்று மாலையில் இருந்து 115.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால், அந்த மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனழை பெய்யும் என இன்று எச்சரிக்கை விடப்பட்டது.
நிலச்சரிவில் சிக்கி வீரேந்தர் குமார் (வயது 35), அவருடைய 10 வயது மகள் இருவரும் உயிரிழந்தனர். வீரேந்தரின் மனைவி வீட்டுக்கு வெளியே சென்றுள்ளார். அதனால், அவர் உயிர் தப்பினார்.
கடந்த ஜூன் முதல் பெய்த பருவமழை மற்றும் அது தொடர்பான சம்பவங்களில் சிக்கி இமாசல பிரதேசத்தில் 320 பேர் பலியாகி உள்ளனர். 4,098 வீடுகள் பகுதியாகவோ அல்லது முற்றிலுமோ அழிந்து விட்டன. ரூ.3,056 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.