ஒரே மேடையில் 2 தோழிகளை திருமணம் செய்த வாலிபர் - மனைவிகளுடன் நடனமாடி அசத்தல்
நண்பர்களாக இருந்த 3 பேரும் ஒன்றாகவே தங்களது வாழ்க்கை பயணத்தை தொடர முடிவு செய்து திருமணம் செய்து கொண்டனர்;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொரபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசீம் சேக். 25 வயதான இவர் கோவாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஷைபா சேக் மற்றும் ஜன்னத் கந்தர் ஆகிய 2 இளம்பெண்களை சந்தித்தார். 2 பெண்களுடனும் அவர் நெருங்கிய தோழனாக பழகி வந்தார்.
இந்த நிலையில் வாசீம் சேக், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதுபற்றி அறிந்த அவரது தோழிகள் 2 பேரும், வாசீம் சேக்கை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதற்கு முதலில் வாசீம் சேக் தயங்கினார். ஆனால் தோழிகள் பிடிவாதமாக இருந்ததால் அவரும் சம்மதித்தார். பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினரிடமும் இதுபற்றி பேசி சம்மதம் பெற்றனர்.
இதையடுத்து கடந்த 16-ந்தேதி சித்ரதுர்கா மாவட்டம் ஹொரபேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்களது திருமணம் நடந்தது. ஒரே மேடையில் தனது தோழிகளான ஷைபா சேக் மற்றும் ஜன்னத் கந்தர் ஆகிய 2 பேரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து தனது மனைவிகளாக வாசீம் சேக் ஏற்றுக்கொண்டார். பின்னர் அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் அவர் தனது 2 மனைவிகளுடனும் சேர்ந்து மேடையில் ஒன்றாக நடனமாடி அசத்தினார்.
இந்த திருமணத்தில் 3 பேரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதுபற்றி அவர்களது குடும்பத்தினர் கூறுகையில், ‘இவர்கள் 3 பேரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அதனால் ஒன்றாகவே தங்களது வாழ்க்கை பயணத்தை தொடர முடிவு செய்து திருமணம் செய்து கொண்டனர்’ என்றனர்.
தற்போது இந்த ருசிகர திருமணம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதைப்பார்த்த பலரும் வாசீம் சேக்கிற்கும், அவரது 2 மனைவிகளுக்கும் வாழ்த்து தெரிவித்து தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.