அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. 'கேம் சேஞ்சராக' இருக்கும் - வெளியான முக்கிய தகவல்

2047-ம் ஆண்டுக்குள் ஜி.எஸ்.டி ஒற்றை அடுக்காக மாற்றப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.;

Update:2025-08-17 09:12 IST

புதுடெல்லி,

இந்தியாவில் ஜி.எஸ்.டி. 5 சதவீதம் 12, 18 மற்றும் 28 என 4 அடுக்காக அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் பெரும் சீர்திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதை நேற்று முன்தினம் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். அதாவது தீபாவளியை முன்னிட்டு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்றும் இதன் மூலம் பொருட்களின் விலை குறையும் எனவும் அவர் கூறினார்.

அதன்படி ஜி.எஸ்.டி. அடுக்கை 2 ஆக குறைக்க உள்ளதாக நிதியமைச்சகம் பின்னர் தெரிவித்தது. அதாவது 12 மற்றும் 28 சதவீதத்தை எடுத்து விட்டு, வெறும் 5 மற்றும் 18 ஆகிய 2 அடுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என கூறியது.

அதேநேரம் சில பாவப்பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜி.எஸ்.டி. மீதான இந்த சீர்திருத்தத்தை அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. மேலும் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளன.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் இந்த வரி சீர்திருத்தம் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

இரட்டை அடுக்கு ஜி.எஸ்.டி. குறித்து நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மிகக்குறைந்த வரியால் மக்களின் பையில் அதிக பணம் சேரும். இதன் மூலம் அதிக நுகர்வுக்கு வழி ஏற்படும். மத்திய அரசின் இந்த சீர்திருத்தம் சுமார் 6 மாதங்கள் மற்றும் பல்வேறு சந்திப்புகளில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. இந்த பரிந்துரையை மந்திரிகள் குழு ஏற்றுக்கொண்டு ஜி.எஸ்.டி. கவுன்சிலும் ஒப்புதல் அளித்தால் வரி விகிதங்களின் ஏற்ற இறக்கத்துக்கு முடிவு ஏற்படுவதுடன், நிலைத்தன்மை உறுதி செய்யப்படும்.

ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை மனதில் வைத்து இந்த அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் தினசரி பயன்பாட்டு பொருட்களுக்கான வரி குறைவதை இது உறுதி செய்கிறது.

இந்த அமைப்பு அமலுக்கு வந்து, இந்தியா ஒரு வளர்ந்த நாடாகவும் மாறி விட்டால், ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டி. குறித்து நாம் யோசிக்க முடியும். அந்தவகையில் 2047-க்குள் ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படும். அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. ஒரு கேம் சேஞ்சராக இருக்கும். வருவாய் மற்றும் செலவினம் ஒரே சீராக இருக்கும் வளர்ந்த நாடுகளுக்கு ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டி. ஏற்றது. எனவே ஒரு ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டி. அமைப்பை உருவாக்குவதே உச்சபட்ச இலக்காகும். எனினும் அதற்கான நேரம் இதுவல்ல” என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்