கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலியத்துறை மந்திரி
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ''கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது'' என மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறினார்.;
புதுடெல்லி,
ஈரான்- இஸ்ரேல் மோதல் ஒருவரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வருவதால், கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. இந்த சூழலில், கச்சா எண்ணெய் விலை உயருமா என்ற கேள்விக்கு, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி அளித்த பதில் வருமாறு;
கச்சா எண்ணெய் விலை நிலையாக, சமாளிக்கக் கூடியதாக உள்ளது. உலகளாவிய எரிசக்தி விலை கட்டுப்பாட்டில் இருக்கிறது. உலகில் எண்ணெய் பற்றாக்குறை இல்லை. நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய போது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலர் தாண்டுமோ என கவலை எழுந்தது.
இருப்பினும், கடந்த சில மாதங்களாக, கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது. அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளிலிருந்து அதிக எண்ணெய் சந்தைக்கு வருகிறது. இஸ்ரேல்-ஈரான் மோதலில் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் இதுவரை குறிவைக்கப்படவில்லை என்பதால் தான் தேவையற்ற கவலை வேண்டாம்" என்றார்.