'போரை ஆதரிக்கவில்லை..' சித்தராமையாவின் கருத்தை வெளியிட்ட பாகிஸ்தான் ஊடகங்கள்

போருக்கு எதிரான குரல்கள் என்று குறிப்பிட்டு சித்தராமையாவின் கருத்தை பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.;

Update:2025-04-27 14:58 IST

பெங்களூரு,

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளன.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் முழு ஆதரவு வழங்கப்படும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதற்கிடையில், பஹல்காம் தாக்குதல் குறித்து கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் போரை ஆதரிக்கவில்லை. அமைதி நிலவ வேண்டும், மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், சித்தராமையாவின் கருத்தை பாகிஸ்தானில் உள்ள ஊடக நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனமான ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்கள்" என்று குறிப்பிட்டு சித்தராமையாவின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தான் ஊடகங்கள் சித்தராமையாவை புகழ்கின்றன. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக நேருவை பாராட்டி ராவல்பிண்டியில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதே போல் தற்போது சித்தராமையாவை பாராட்டி பாகிஸ்தானில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்வார்களா?" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது கருத்து குறித்து விளக்கமளித்த சித்தராமையா, "பாகிஸ்தானுடன் போருக்கு செல்லக்கூடாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. போர் எதற்கும் தீர்வாகாது என்றுதான் சொன்னேன். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது உளவுத்துறையின் தோல்வி. இந்திய அரசு போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை. போரை தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், நாம் நிச்சயமாக போருக்கு செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்