பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பு; ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த கோபி மற்றும் சாஹிலிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.;
சண்டிகார்,
காஷ்மீரின் சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹல்காமில் சமீபத்தில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கொடூர தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை தகர்த்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடரும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இந்த சூழலில், சமீப காலங்களாக பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. யூ டியூபர் ஜோதி மல்கோத்ரா உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடனான தொடர்பு பற்றி அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுபற்றி பஞ்சாபின் அமிர்தசரஸ் நகர காவல் துறையின் மூத்த போலீஸ் சூப்பிரெண்டு மணீந்தர் சிங் கூறும்போது, இந்திய ராணுவத்தின் வீரரான குர்பிரீத் கோபி என்ற கோபி போஜி என்பவர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
அவர் பென் டிரைவ் உள்ளிட்டவற்றின் உதவியுடன் ரகசிய மற்றும் உளவு தகவல்களை பகிர்ந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் இருந்து அது தெரிய வந்துள்ளது என கூறியுள்ளார்.
அவரை பற்றிய தகவல் சேகரிக்கப்பட்டபோது, அவர் ஜம்முவில் பணிக்கு அமர்த்தப்பட்டது தெரிய வந்தது. கோபியை கைது செய்ததும், நிறைய ரகசிய தரவுகள் கிடைத்தன. விரிவான விசாரணையை தொடர்ந்து, எப்.ஐ.ஆர். பதிவு செய்து அவரை கைது செய்தோம். இதுபற்றி பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கூட்டாக விசாரணை செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.
கோபி, தன்னுடைய நண்பரான தரிவால் கிராமத்தில் வசித்து வருபவரான சாஹில் மசீ என்பவருடனும் தொடர்பில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து அந்த நபரும் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பில் இருந்த கோபி மற்றும் சாஹிலிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில், ராணா ஜாவித் என்ற ஐ.எஸ்.ஐ. அமைப்பை சேர்ந்த முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். இந்த விவகாரத்தில், ஜாவித்துடன் தொடர்பில் இருக்க பயன்படுத்தப்பட்ட 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என பஞ்சாப் டி.ஜி.பி. தெரிவித்து உள்ளார்.