இங்கிலாந்து வெளியுறவு துறை மந்திரியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இரு நாடுகளுக்கு இடையேயான கல்வி மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் காணப்படும் வளர்ச்சியை லாமி சுட்டிக்காட்டினார்.;
புதுடெல்லி,
இங்கிலாந்து வெளியுறவு துறை மந்திரி டேவிட் லாமி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் அவர் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். இதன்படி, பிரதமர் மோடியை அவர் இன்று சந்தித்து பேசினார்.
இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டேவிட் லாமியை சந்தித்து பேசியது மகிழ்ச்சி. நம்முடைய விரிவான தூதரக நட்புறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட பெரிய அளவில் பங்காற்றியதற்காக அவருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். சமீபத்தில் நிறைவடைந்த பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்த நட்புறவு இன்னும் வலுவடைந்துள்ளது.
எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமைக்காக இங்கிலாந்து நாட்டை மதிக்கிறேன் என பகிர்ந்துள்ளார்.
இதேபோன்று, மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் மற்றும் லாமியும் இருதரப்பு விவகாரங்கள் பற்றி டெல்லியில் இன்று நடந்த சந்திப்பில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்து கொண்ட லாமி, பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டுக்கு இங்கிலாந்தின் ஆதரவை வெளிப்படுத்தினார்.
இரு நாடுகளுக்கு இடையேயான கல்வி மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் காணப்படும் வளர்ச்சியையும் அவர் இந்த சந்திப்பின்போது சுட்டிக்காட்டினார்.