'ராகுல் காந்தி மேலும் முதிர்ச்சியுடன், பிரதமர் மோடிக்கு இணையாக இருக்க வேண்டும்' - கிரண் ரிஜிஜு

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் கருத்தையே ராகுல் காந்தியும் பேசினார் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-18 21:20 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மேலும் முதிர்ச்சியுடன், பிரதமர் மோடிக்கு இணையாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"மக்களவை எதிர்க்கட்சி தலைவர், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது ஆரம்பத்தில் இந்திய அரசாங்கத்தை ஆதரித்தார். ஆனால் பின்னர் பாகிஸ்தானின் கருத்தை எதிரொலிக்கத் தொடங்கினார். எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் நமது எதிரி நாட்டிற்கு சாதகமாக பேசி, நமது தேசிய நலனுக்கு தீங்கு விளைவித்தால், அதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது?

உள்நாட்டில், நமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஏனென்றால் அதுதான் ஜனநாயகத்தின் இயல்பு. எதிர்க்கட்சி தலைவராக, அரசாங்கத்தை விமர்சிப்பதே தனது வேலை என்று ராகுல் காந்தி கூறலாம். ஆனால் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் கருத்தையே ராகுல் காந்தியும் பேசினார்.

முதலில் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்திய ராகுல் காந்தி, பின்னர் பதற்றத்தைக் குறைக்க அழைப்பு விடுக்கத் தொடங்கினார். அதன் பின்னர் மோதலின்போது இந்தியா இழந்த விமானங்களின் எண்ணிக்கையை அறிய விரும்புவதாக கூறினார்.

நமது எதிர்க்கட்சித் தலைவர் மேலும் முதிர்ச்சியடைந்தவராகவும், புரிதல் மிக்கவராகவும், அறிவுத்திறன் மிக்கவராகவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் பிரதமர் மோடிக்கு இணையாக இருக்கக் கூடிய ஒரு எதிர்க்கட்சி தலைவர் நமக்குத் தேவை.

நாடாளுமன்றம் அனைத்து எம்.பி.க்களையும் உள்ளடக்கியது. நாங்கள் அரசாங்கத்தில் இருக்கிறோம். எங்களிடம் அதிகமான எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால், சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாங்கள் மட்டுமே பேச வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க விரும்புகிறார்கள். அது நடக்காது.

ஜனநாயகம் என்பது அனைவருக்கும் இடம் கொடுப்பதாகும். ஒவ்வொரு நாடாளுமன்ற எம்.பி.யும் சில பகுதிகள், சில மாநிலங்கள் மற்றும் சில தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த சூழலில் எதிர்க்கட்சியினர் அனைத்து இடத்தையும் அவர்களே ஆக்கிரமிக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது.

இந்திய ஜனநாயகம் மிகவும் துடிப்பானது. நாடாளுமன்றத்திலும் அது பிரதிபலிக்கிறது. இந்திய நாடாளுமன்றம் மிகவும் சத்தமாக, மிகவும் குழப்பமாக இருக்கிறது என்று பலர் கூறலாம். ஆனால் நான் அதை வரவேற்கிறேன். மிகவும் துடிப்பான ஜனநாயகமாக இருப்பதால் சில சூடான விவாதங்கள் இருக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்