'நீட்' தேர்வு முடிவுகளுக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற ஒரு தேர்வில் நாங்கள் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.;
புதுடெல்லி,
இளநிலை மருத்துவ படிப்பு களுக்கான 'நீட்' தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. கடந்த மே 4-ந் தேதி இத்தேர்வு நடந்தது. அதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.இதற்கிடையே, நீட் தேர்வு கேள்விகளில் ஒன்றில் தவறு இருப்பதாக ஒரு மாணவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த தவறை சரிசெய்யுமாறும், அதற்கேற்ப தேர்வு முடிவுகளை திருத்தி வெளியிடுமாறும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். மேலும், கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். நீதிபதிகள் கூறியதாவது:-
2 நாட்களுக்கு முன்பு இதேபோன்ற மனுவை தள்ளுபடி செய்தோம். ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற ஒரு தேர்வில் நாங்கள் தலையிட முடியாது. அது, தனிப்பட்ட நபரின் வழக்கு அல்ல. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.