வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி தற்கொலை முயற்சி; விஷம் குடித்த சிறுமி உயிரிழப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் பாப்ரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் தேஜ்பால் (வயது 30). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர்.
இதனிடையே, காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காதல் ஜோடி கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக காதல் ஜோடி பக்கத்து மாவட்டமான பகத்பூருக்கு சென்றுள்ளனர். அங்கு காதல் ஜோடி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அங்குள்ள பாழடைந்த கட்டிட பகுதிக்கு சென்ற இருவரும் விஷம் குடித்துள்ளனர். இதில், இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த நபர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். அதேவேளை உயிருக்கு ஆபத்தான நிலையில் தேஜ்பால் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.