சட்டசபை தேர்தலுக்கு முன்பே பதவி ஏற்புக்கு நாள் குறித்த தேஜஸ்வியாதவ்
பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.;
பாட்னா,
பீகார் சட்டசபைக்கு வருகிற 6 மற்றும் 11-ந்தேதிகள் என 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.இந்தநிலையில் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளரான ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், பாட்னாவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.அப்போது, ஜன் சுராஜ் கட்சி ஆதரவாளர் கொலை வழக்கில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆனந்த் சிங் கைது செய்யப் பட்டது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-
தீவிரமான சம்பவம் நடந்துள்ளது. பிரதமர் மோடி பீகாருக்கு வருகிறார். மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.கடுமையான குற்றச்செயல்கள் நடக்காத நாளே இல்லை.ஆனால், எங்கள் கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் இந்த நிலை மாறும்.நவம்பர் 14-ந் தேதி, தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதி. 18-ந் தேதி எங்கள் கூட்டணி அரசு பதவியேற்பு விழா நடைபெறும். நவம்பர் 26-ந் தேதிக்கும், ஜனவரி 26-க்கும் இடையே அனைத்து குற்றவாளிகளும் அவர்கள் எந்த சாதி, மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறையில் தள்ளப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், நிதிஷ்குமார் மீது பீகார் மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பதை தெரிந்துகொண்டு, அவர் வெளிநாட்டில் விடுமுறையை கழிக்க டிக்கெட் எடுத்து வைத்திருப்பதாக அறிந்தேன். அது உண்மையாக இருந்தால், அவர் இன்னும் முன்கூட்டியே சென்று ஓய்வு எடுக்கட்டும் என்றார்.