திடீரென சாய்ந்து விழுந்த கோவில் தேர்: பக்தர்கள் அதிர்ச்சி
மங்களூரு அருகே பிரசித்திபெற்ற பாப்பநாடு துர்கா பரமேஸ்வரி கோவில் தேர் சாய்ந்து விழுந்தது.;
தட்சிண கன்னடா,
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் பாப்பநாடு துர்கா பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று அதிகாலையில் அங்கு தேரோட்டம் நடந்தது. அதாவது அதிகாலை 1.40 மணியளவில் கோவில் தேரோட்டம் நடந்தது.
இந்த தேர் 30 அடி உயரம் கொண்டதாகும். வண்ண, வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாகும் கோவில் தேர் அலங்கரிக்கப்பட்டது. கோவில் கோபுரம் போன்று தேரின் மீது மலர்களால் கோபுரம் அமைக்கப்பட்டது.
தேரை மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். இந்த நிலையில் தேரின் மீது மலர்களால் அமைக்கப்பட்டு இருந்த கோபுர வடிவம் திடீரென சரிந்தது. அதை இணைத்து கட்டப்பட்டு இருந்த கட்டைகள் முறிந்ததால் அது சாய்ந்தது. இதைப்பார்த்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் தேர் முழுவதும் சாய்ந்து விழுந்தது. பக்தர்கள் சிதறி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. தேர் மீது அமர்ந்திருந்த ஒரு பூசாரிக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டது.
கோவில் தேர் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது. இதனால் அங்கு பெருந்திரளான மக்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.
சிறிது நேரத்தில் மாற்றுத்தேர் கொண்டு வரப்பட்டது. அதில் அம்மன் எழுந்தருளினார். அதையடுத்து மீண்டும் தேரோட்டம் நடந்தது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பக்தர்கள் சிலர் கூறுகையில், கோவில் நிர்வாக குழுவினர், விழா துவங்குவதற்கு முன்பே, தேரின் நிலை என்ன என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டும். கரையான் அரித்திருப்பதை கண்டுபிடித்திருந்தால், இச்சம்பவம் நடந்திருக்காது" என்று தெரிவித்தனர்.