இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மொனாக்கோவில் மான்டி கார்லோ டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், சக நாட்டவரான டேவிடோவிச் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப்போட்டியில் லோரென்சோ முசெட்டி அல்லது அலெக்ஸ் டி மினார் உடன் அவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்தது. லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ களமிறங்கியது. 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 186 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சத்தீஷ்காரின் பிஜாபூர் மாவட்டம் இந்திரவாடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டம் தொடர்பாக சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் நேற்று பெரிய அளவில் வன்முறை பரவியது. பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை மர்ம கும்பல் சூறையாடியது. வீட்டு உபயோக பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வன்முறைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர் என இன்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் விழாவில், பா.ஜ.க.வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினராக தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோன்று, உறுப்பினர்களாக, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, சரத்குமார் உள்ளிட்டோரும் உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது.
கடந்த 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்திலும் அவர் நடித்துள்ளார். தற்போது ரஜினியின், ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் அஜித் மற்றும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியுடன் உள்ள வீடியோவை யோகிபாபு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று முறைப்படி நியமிக்கப்பட்டார். இதற்காக ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவருக்கு கட்சியின் துண்டு, பிரசாதம் ஆகியவற்றை வழங்கினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்துள்ளது. லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ களமிறங்க உள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
திருப்பத்தூர், வேலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், மதுரை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.