போர் பதற்றம்; இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13-ந்தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து இன்று 6-வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், 'ஆபரேஷன் சிந்து' என்ற நடவடிக்கையின் மூலம் ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி முதற்கட்டமாக ஈரானில் இருந்து சுமார் 110 இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து இண்டிகோ விமானம் மூலம் மாணவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதே போல் இஸ்ரேலில் இருந்தும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் +972 54-7520711, +972 54-3278392 ஆகிய உதவி எண்கள் மூலம் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இஸ்ரேலில் நிலவும் சூழலை இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஈரானின் தாக்குதல் தீவிரமடைந்தால் இஸ்ரேல் அரசின் வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.